சர்வதேச அளவில் சாதனை படைத்த புதுச்சேரி இளைஞர்களின் ‘Axis’ படக்குழு: ஆளுநர் கைலாஷ்நாதன் பாராட்டு!
புதுச்சேரி: சர்வதேச திரைப்பட விழாக்களில் பல்வேறு விருதுகளையும் அங்கீகாரத்தையும் வென்று சாதனை படைத்துள்ள ‘Axis’ திரைப்படக் குழுவினரை, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
புதுச்சேரியைச் சேர்ந்த இளம் இயக்குநர் எஸ். வீரபாண்டியன் தலைமையிலான படைப்பாளிகள் குழுவினர் ‘Axis’ என்ற முழுநீளத் திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். விண்வெளி அறிவியல் (Star Science), வான்வெளி நிகழ்வுகள் (Celestial Phenomena) மற்றும் பகுத்தறிவு சிந்தனைகளை மையக்கருவாகக் கொண்டு இத்திரைப்படம் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கான் உலகத் திரைப்பட விழாவில் (Cannes World Film Festival) இறுதிப் போட்டிக்குத் (Finalist) தகுதி பெற்றதுடன், இத்தாலி, பிரான்ஸ், கிரீஸ், துருக்கி மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் பல்வேறு விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி லோக் நிவாஸில் ஆளுநர் கே. கைலாஷ்நாதனை இத்திரைப்படக் குழுவினர் நேரில் சந்தித்தனர். அப்போது ஆளுநர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “புதுச்சேரியின் இளம் தலைமுறையினர் துணிச்சலான, புதுமையான அறிவியல் கருத்துக்களை சினிமாவின் வாயிலாக உலக அரங்கிற்கு எடுத்துச் செல்வது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இக்குழுவினரின் எதிர்கால படைப்பு முயற்சிகள் அனைத்தும் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.