தமிழ்நாடு

முதலமைச்சர் கோப்பை மல்லர்கம்பப் போட்டி: தங்கம், வெள்ளி வென்று விழுப்புரம் மாணவ, மாணவியர் அபார சாதனை!

விழுப்புரம்:
தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட முதலமைச்சர் கோப்பை 2026 மாநில அளவிலான மல்லர்கம்பப் போட்டிகளில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் மிகச் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

இப்போட்டியில் கல்லூரி மற்றும் பள்ளி அளவிலான பிரிவுகளில் விழுப்புரம் மாவட்ட வீரர், வீராங்கனைகள் களமிறங்கினர். இதில் கல்லூரி மாணவியர் பிரிவில் பங்கேற்ற சங்கீதா முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தையும், யாழினி இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினர். கல்லூரி மாணவர் பிரிவில் அபாரமாக செயல்பட்ட பகவத்சிங் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.

அதேபோல், பள்ளி மாணவர் பிரிவில் மணி தர்ஷன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெள்ளிப் பதக்கம் வென்றார். பள்ளி மாணவியர் பிரிவில் திறமையை நிரூபித்த முத்தரசி தங்கப் பதக்கத்தையும், ஹரி ஹாசினி வெண்கலப் பதக்கத்தையும் தட்டிச் சென்றனர். இதன் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி ஆகிய இரு பிரிவுகளிலும் விழுப்புரம் மாவட்ட அணி பதக்கப் பட்டியலில் முன்னிலை பெற்றது.

மாநில அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்த வீரர், வீராங்கனைகளுக்கு அரசு சார்பில் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்படி தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.1,00,000, வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.75,000 மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.50,000 வீதம் காசோலைகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

மாநில அளவிலான இப்போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவியர்களுக்கும், அவர்களுக்கு சீரிய முறையில் பயிற்சி அளித்த பயிற்சியாளர்களுக்கும் தமிழ்நாடு மல்லர் கம்ப கழக செயலாளர் முனைவர் ஜனார்த்தனன், செயல் தலைவர் முனைவர் துரை செந்தில்குமார் மற்றும் SDAT பயிற்சியாளர் மல்லன் ஆதித்தன் ஆகியோர் நேரில் பாராட்டி தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன