புதுச்சேரியில் தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம் அறிவிப்பு!

புதுச்சேரி: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பட்டாசுகள் வெடிப்பதற்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி குறிப்பிட்ட 2 மணி நேரம் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் ந.ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, பொதுமக்கள் பட்டாசுகளை வெடிப்பதற்கு நாளொன்றுக்கு காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரையிலும், மாலை 7.00 மணி முதல் 8.00 மணி வரையிலும் என மொத்தம் 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் நீதிமன்றக் கட்டிடங்கள் ஆகியவற்றின் 100 மீட்டர் சுற்றளவுக்குட்பட்ட அமைதிப் பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசுகளால் ஏற்படும் கடுமையான சத்தம் மற்றும் காற்று மாசு மனித உடலுக்கு நச்சுத்தூள், ரசாயனப் புகையினால் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
குறிப்பாக பட்டாசு புகையினால் மூச்சுத்திணறல், கண் மற்றும் உடல் உறுப்புகளில் காயங்கள், செவித்திறன் பாதிப்பு, தூக்கமின்மை, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட கோளாறுகள் ஏற்படுகின்றன. இதனால் முதியவர்கள், கர்ப்பிணிகள், இதய மற்றும் ஆஸ்துமா நோயாளிகள், பச்சிளம் குழந்தைகள் மட்டுமின்றி வளர்ப்புப் பிராணிகளும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, நமது மகிழ்ச்சி பிறருக்கு இடையூறாக அமையாத வகையில், தீபாவளித் திருநாளில் அகல் விளக்குகளை ஏற்றி, இனிப்புகளைப் பகிர்ந்து, சத்தமும் புகையுமற்ற மாசற்ற பசுமைத் தீபாவளியாகக் கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
English summary: The Puducherry Pollution Control Committee said that under Supreme Court guidelines the bursting of crackers is permitted for only two hours a day during Diwali, from 7 to 8 a.m. and from 7 to 8 p.m. Member secretary N. Ramesh said in a press release that crackers are completely banned within 100 metres of hospitals, places of worship, educational institutions and court buildings. The committee urged people to celebrate a noise-free and pollution-free green Diwali with lamps and sweets, noting the effects of noise and smoke on elderly people, pregnant women, patients and animals.


