வங்கக்கடலில் சூறாவளிக் காற்று எச்சரிக்கை: புதுவை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவு
புதுச்சேரி, அக்.25:
வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் புதுச்சேரி மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அரசு மீன்வளத்துறை இயக்குநர் முகமது இஸ்மாயில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பின்படி, வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.
மேலும் மத்திய மேற்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 60 முதல் 90 கி.மீ வேகத்திலும், தெற்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அந்தமான் தீவுப் பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும். அக்.26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்து மணிக்கு 120 முதல் 185 கி.மீ வேகத்தில் அதீத பலத்த காற்று வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
எனவே, வானிலை ஆய்வு மையத்தின் இந்த அபாய எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு, மறு அறிவிப்பு வரும் வரை குறிப்பிட்ட பகுதிகளுக்கு புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் எக்காரணம் கொண்டும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.


