கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 10,000 டயாலிசிஸ் சிகிச்சைகள் வெற்றிகரமாக நிறைவு: கேக் வெட்டி கொண்டாட்டம்!
புதுச்சேரி, அக். 23: புதுச்சேரி கதிர்காமத்தில் இயங்கி வரும் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (IGMC&RI) சிறுநீரகவியல் துறை டயாலிசிஸ் பிரிவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட டயாலிசிஸ் சிகிச்சைகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டு புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது.
ஏழை, எளிய சிறுநீரக நோயாளிகளுக்கு நவீன மருத்துவ வசதிகளுடன் இலவசமாகவும் தொடர்ச்சியாகவும் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்துறையில் பத்தாயிரமாவது சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டதை முன்னிட்டு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி இயக்குனர் உதயசங்கர், டீன் ராமச்சந்திர பட், மருத்துவக் கண்காணிப்பாளர் ஜோசப் ராஜேஷ், மக்கள் தொடர்பு அலுவலர் ராஜேஷ், உறைவிட மருத்துவ அலுவலர் (RMO) அருண், மருத்துவர் கதிரவன் உள்ளிட்ட பல்வேறு துறைத் தலைவர்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கலந்து கொண்டு கேக் வெட்டி சாதனையைக் கொண்டாடினர்.
தொடர்ந்து, டயாலிசிஸ் டெக்னிஷியன் பிரிவில் பயிற்சி நிறைவு செய்த மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அத்துடன் அப்பிரிவில் சிகிச்சை பெற்று வரும் சிறுநீரக நோயாளிகளுக்கு நலத்திட்ட அன்பளிப்புகளும் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது.


