புதுச்சேரி: எம்.எல்.ஏ அலுவலகம் அருகிலேயே சீரமைக்கப்படாத வாய்க்கால்; ஒரு மாதமாக நீடிக்கும் அவலத்தால் வைரலாகும் வீடியோ!
புதுச்சேரி: புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே, ரெயின்போ நகர் செல்லும் பிரதான பாதையில் தோண்டப்பட்ட வாய்க்கால் பணிகள் முடிக்கப்படாமல் ஒரு மாதத்திற்கும் மேலாக அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நகரின் முக்கியப் பகுதியான ரெயின்போ நகர் பகுதிக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சென்று வருகின்றனர். இந்த நிலையில், அங்குள்ள வாய்க்காலைச் சீரமைப்பதற்காகத் தோண்டப்பட்டு நீண்ட நாட்களாகியும் பணிகள் ஆமை வேகத்தில் கூட நடைபெறாமல் முழுமையாக முடங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், உப்பனாறு வாய்க்கால் விவகாரங்கள் குறித்துப் பேசி வரும் சூழலில், காமராஜர் நகர் தொகுதி எம்.எல்.ஏ அலுவலகம் அமைந்துள்ள இடத்திற்கு மிக அருகிலேயே இந்த அவலநிலை நீடிப்பதைச் சுட்டிக்காட்டி அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆதங்கத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளார். மக்கள் பிரதிநிதியின் அலுவலகத்திற்கு மிக அருகிலேயே பொதுமக்கள் பயன்படுத்தும் வாய்க்கால் இத்தகைய மோசமான நிலையில் இருப்பது முரண்பாடாக உள்ளதாகக் கிண்டலுடன் அந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பேசுபொருளாக மாறியுள்ளது.
புதுச்சேரி நகர்ப் பகுதிகளில் நவீன சாலைகள் மற்றும் கட்டமைப்புப் பணிகளை மேம்படுத்தப் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், நகரின் மையப்பகுதியில் உள்ள பொதுமக்கள் புழங்கும் பாதைகளில் அடிப்படை வாய்க்கால் சீரமைப்புப் பணிகளே மாதக்கணக்கில் இழுத்தடிக்கப்படுவது பொதுமக்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இரவு நேரங்களில் இவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயமும் நீடிக்கிறது.
எனவே, இனியும் காலதாமதம் செய்யாமல், காமராஜர் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பொதுப்பணித்துறை, நகராட்சி அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, தோண்டப்பட்டு பாழடைந்து கிடக்கும் இந்த வாய்க்காலை விரைந்து கான்கிரீட் தளம் அமைத்து முழுமையாகச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி குடியிருப்புவாசிகள் ஒருமித்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

