ஏனாமில் அர்னாப் புயல் பாதிப்பு: 16,405 குடும்பங்களுக்கு நிவாரணம் கோரி முதல்வர், ஆளுநரிடம் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மனு!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தின் பிராந்தியங்களில் ஒன்றான ஏனாமில் அர்னாப் புயலால் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகளை விரைந்து சீரமைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை உடனடியாக வழங்கவும் வலியுறுத்தி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் ந. ரங்கசாமி ஆகியோரை நேரில் சந்தித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் விரிவான கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.
அமைச்சர் அளித்த மனுவில், அர்னாப் புயலின் தாக்கத்தால் ஏனாம் பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏனாமில் உள்ள 16,405 குடும்பங்களுக்கும் குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) அடிப்படையில் நிவாரண நிதி வழங்க வேண்டும் எனவும், சேதமடைந்த வீடுகளுக்குத் தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் தள்ளுவண்டி மற்றும் சாலையோர உணவு விற்பனையாளர்களுக்கும் அரசு சார்பில் சிறப்பு உதவி வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
விவசாயம் மற்றும் மீன்வளத் துறைகளில் ஏற்பட்டுள்ள பேரிழப்புகள் குறித்து மனுவில் விவரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 101 ஹெக்டேர் பயிர்ச் சேதத்துக்கு வழக்கமான தொகையை விட இரட்டிப்பு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கால்நடைகளின் பாதுகாப்பிற்கு 30 நாட்களுக்குத் தேவையான பசுந்தீவனங்களை அரசே வழங்க வேண்டும். அத்துடன், புயல் காற்றில் ஏனாம் பகுதியில் 29 மீன்பிடிப் படகுகள் முழுமையாகவும், 848 படகுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதால், வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மீனவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கேட்டுக்கொண்டுள்ளார்.
புயலால் வேரோடு சாய்ந்த மின்கம்பங்கள், உடைந்துபோன சாலைகள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விரிவான முடிவுகளை மேற்கொள்வதற்காக, இன்று பிற்பகல் 2 மணிக்கு புதுச்சேரி சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலும், தொடர்ந்து பிற்பகல் 3.30 மணிக்கு லோக் நிவாஸில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தலைமையிலும் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
English summary: Yanam Minister Malladi Krishna Rao has petitioned Lieutenant Governor K. Kailashnathan and Chief Minister N. Rangasamy for relief after Cyclone Arnab. He asked for relief money for all 16,405 families in Yanam based on ration cards, compensation for damaged houses, help for street vendors, double compensation for 101 hectares of damaged crops, fodder for livestock for 30 days, and compensation for fishermen after 29 boats were fully and 848 partly damaged. High-level review meetings were scheduled at the Assembly at 2 pm and at Lok Niwas at 3.30 pm.


