புதுச்சேரி

சுண்ணாம்பாறு மேம்பாலத்தில் தேங்கிய மழைநீர்: நேரில் ஆய்வு செய்து அடைப்பை உடனடியாக நீக்க வைத்த துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன்!

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வரும் சூழலில், துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன் இன்று நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு பகுதிக்கு நேரில் சென்று நீரோட்டத்தின் நிலவரத்தைப் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.

கள ஆய்வின்போது, சுண்ணாம்பாறு மேம்பாலத்தின் மேல் மழைநீர் பெருமளவில் தேங்கி நின்றதை துணைநிலை ஆளுநர் கவனித்தார். பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த நீர்வடிகால் துவாரங்களில் அடைப்பு ஏற்பட்டிருந்ததே நீர் தேங்குவதற்குக் காரணம் என்பதை அறிந்து, அங்கிருந்த ஒருவரின் உதவியுடன் நீர்வடியும் பாதையில் இருந்த அடைப்புகளை உடனடியாக அகற்றச் செய்தார். ஆளுநரின் உடனடி நடவடிக்கையால் பாலத்தில் தேங்கியிருந்த மழைநீர் விரைவாக வடிந்து நீரோட்டத்தில் கலந்தது. இதன்மூலம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயம் தவிர்க்கப்பட்டது.

தொடர்ந்து, ஆற்றில் செல்லும் நீரின் வரத்து, கரையோரப் பகுதிகளின் பாதுகாப்பு மற்றும் பாலத்தின் உறுதித்தன்மை குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். கனமழை நீடிக்கும் பட்சத்தில் ஆறுகள் மற்றும் ஏரிகளில் நீர்வரத்து அதிகரிப்பதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

ஏற்கனவே புதுச்சேரியில் கனமழை பாதிப்புகளைக் குறைக்க உழவர்கரை, ஏம்பலம் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் மக்கள் பிரதிநிதிகள் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வாய்க்கால்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற மாவட்ட ஆட்சியர் ஏ. குலோத்துங்கன் உத்தரவிட்டிருந்ததும், தாழ்வான பகுதிகளில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

மழைக்கால இடர்பாடுகளைத் தவிர்க்கும் வகையில் பொதுப்பணித்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் எப்போதும் விழிப்புடன் செயல்பட வேண்டும் எனவும், நீர்நிலைகள் மற்றும் பாலங்களில் எவ்வித அடைப்பும் இன்றி மழைநீர் சீராக வடிவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன