புதுச்சேரி

புதுச்சேரி சென்டாக் மருத்துவப் படிப்புகள்: ஸ்ட்ரே சுற்று வரைவு ஒதுக்கீட்டு பட்டியல் வெளியீடு!

புதுச்சேரி, 23/10/2026: புதுச்சேரி சென்டாக் (CENTAC) மூலமாக நீட் தேர்வு அடிப்படையில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான (MBBS, BDS, BAMS) ஸ்ட்ரே சுற்று வரைவு ஒதுக்கீட்டுப் பட்டியல் (Stray Round Draft Allotment List) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்டாக் ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஸ்ட்ரே சுற்று வரைவு ஒதுக்கீட்டுப் பட்டியல் www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்கள் சுயவிவர பக்கத்தின் (Dashboard Login) மூலமாக உள்நுழைந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் நிலவரத்தை சரிபார்த்துக் கொள்ளலாம். இந்த ஒதுக்கீட்டில் ஏதேனும் மறுப்புகள் அல்லது ஆட்சேபனைகள் இருந்தால், மாணவர்கள் 24.10.2026 அன்று காலை 10.00 மணிக்குள் தங்களது லாகின் பக்கத்தில் உள்ள ‘GRIEVANCES’ வசதியைப் பயன்படுத்தி புகார்களைப் பதிவு செய்யலாம். பெறப்படும் புகார்கள் பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்பட்ட பின்னர், தற்காலிக ஒதுக்கீட்டுப் பட்டியல் (Provisional Allotment List) இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு ஒதுக்கீட்டுப் பட்டியல் தற்காலிகமானது என்றும் மாற்றத்திற்கு உட்பட்டது என்றும் சென்டாக் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த வரைவுப் பட்டியலை வைத்து ஒதுக்கீட்டு உரிமை கோர முடியாது. தற்காலிக ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியாகி, மாணவர்கள் தங்களுக்கான அதிகாரப்பூர்வ ஒதுக்கீட்டுக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்த பின்னரே சம்பந்தப்பட்ட கல்லூரிகளை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 0413-2655570 மற்றும் 2655571 ஆகிய உதவி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

English summary: The draft stray round allotment list for undergraduate medical courses (MBBS, BDS, BAMS) under CENTAC Puducherry was published on 23 October 2026 on www.centacpuducherry.in, covering the 2026-27 academic year. Students can check their status through their dashboard login and file grievances through the GRIEVANCES facility before 10.00 am on 24 October 2026. CENTAC said the list is provisional and subject to change, and that students should approach colleges only after the provisional list is out and they have downloaded their official allotment letter.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன