தேசிய பூப்பந்து போட்டியில் பதக்கங்களை வென்று புதுச்சேரி பள்ளி சாதனை
புதுச்சேரி, நவம்பர் 1: சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற 45-வது சப்-ஜூனியர் தேசிய பூப்பந்து போட்டியில் புதுச்சேரி சாய்ராம் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ-மாணவிகள் பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
இப்போட்டியில் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், ஆண்கள் பிரிவில் மூன்றாம் இடம் பெற்று வெண்கலப் பதக்கமும் கைப்பற்றப்பட்டன. மேலும், கலப்பு இரட்டையர் பிரிவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்று பள்ளிக்கும் புதுச்சேரி மாநிலத்திற்கும் மாணவர்கள் பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றி பெற்று பள்ளிக்கு திரும்பிய மாணவ-மாணவிகளுக்கு சக மாணவர்களும், பள்ளி முதல்வர் முனைவர் சுதாவும் பொன்னாடை அணிவித்து மாலைகள் சூட்டி பாராட்டு தெரிவித்தனர். மாணவர்களின் அயராத உழைப்பும் முறையான பயிற்சியுமே இந்த வெற்றிக்கு காரணம் என்று முதல்வர் சுதா குறிப்பிட்டார்.
தேசிய அளவில் பதக்கங்களை வென்ற மாணவ-மாணவிகள் பள்ளி முதல்வர் முனைவர் சுதா தலைமையில் புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி, உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம், விளையாட்டுத்துறை அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். பள்ளியின் தாளாளர் சாய் பிரகாஷ் லியோ முத்து மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
