காரைக்கால்

டெல்லியில் நடைபெற்ற தேசிய உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பயிலரங்கம்: நிரவி-திருப்பட்டினம் எம்.எல்.ஏ. டி.கே.எஸ்.எம். மீனாட்சி சுந்தரம் பங்கேற்பு!

புதுடெல்லி: புதுச்சேரி சட்டப்பேரவைக்குட்பட்ட காரைக்கால் பிராந்தியத்தின் நிரவி-திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. டி.கே.எஸ்.எம். மீனாட்சி சுந்தரம், புதுடெல்லியில் நடைபெற்ற மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தேசிய அளவிலான உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பயிலரங்கில் முனைப்புடன் கலந்துகொண்டார்.

புதுடெல்லியில் உள்ள புகழ்பெற்ற ‘இந்தியா சர்வதேச மையத்தில்’ (India International Centre) அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய இரு தினங்கள் இந்தப் பயிலரங்கம் சிறப்பாக நடைபெற்றது. நாட்டின் முன்னணி தன்னாட்சி ஆய்வு நிறுவனமான பி.ஆர்.எஸ். லெஜிஸ்லேட்டிவ் ரிசர்ச் (PRS Legislative Research) அமைப்பு இதனை ஒருங்கிணைத்தது. இந்தியாவில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்ட வரைவுகள், அரசு கொள்கைகள், நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்த துல்லியமான ஆய்வுத் தகவல்களை வழங்கும் பணிகளை இந்நிறுவனம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இந்தப் பயிலரங்கில், நவீன யுகத்தில் மாநிலங்களின் உள்கட்டமைப்புத் தேவைகள், நெடுஞ்சாலைகள், குடிநீர் மற்றும் பொதுப் பயன்பாட்டு வசதிகளைத் திட்டமிடுதல், நிதி ஆதாரங்களை ஒருங்கிணைத்தல் போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் நிலவும் உள்கட்டமைப்புச் சவால்களைக் கண்டறிந்து, அதற்கேற்ப நீண்டகால பலனளிக்கும் நவீன திட்டங்களை எவ்வாறு வகுப்பது என்பது தொடர்பான பயிற்சியும் வழங்கப்பட்டது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பல்வேறு தொகுதிகளிலும் உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகள் அண்மைக்காலமாக முன்னுரிமை பெற்று வரும் சூழலில், தேசிய அளவில் நடைபெற்ற இப்பயிற்சியில் பெறப்பட்ட அனுபவங்கள் காரைக்கால் மாவட்டத்திற்குட்பட்ட நிரவி-திருப்பட்டினம் தொகுதியின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களை மேம்படுத்தவும், மக்களின் அடிப்படைத் தேவைகளை முறைப்படி நிறைவேற்றவும் பேருதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன