பிரதமரை அவமதிக்கும் வகையில் சுவரில் வாசகம்: புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேர் அதிரடி சஸ்பெண்ட்!
புதுச்சேரி, அக்.25:
புதுவை மத்திய பல்கலைக்கழக வளாக மதில் சுவரில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை அவதூறாக சித்தரிக்கும் வகையிலான வாசகங்கள் ஸ்பிரே பெயிண்ட் மூலம் எழுதப்பட்டிருந்த விவகாரம் பெரும் சர்ச்சையையும் பதற்றத்தையும் கிளப்பியுள்ளது.
சுவரெழுத்துக்களைக் கண்டு ஆவேசமடைந்த ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவதூறு வாசகங்களை அழித்து மறைத்த அவர்கள், பின்னர் பல்கலைக்கழகப் பதிவாளர் குலசேகரனை நேரில் சந்தித்துப் புகார் மனு அளித்தனர். இச்செயலில் ஈடுபட்ட விஷமிகளை உடனடியாகக் கண்டறிந்து கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்ட தீவிர விசாரணையில், ஸ்பிரே பெயிண்டிங் மூலம் சுவரெழுத்து எழுதியதை சம்பந்தப்பட்ட மாணவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து எம்.ஏ. பொருளாதாரத்துறை 2-ம் ஆண்டு மாணவர் அக்னி அஷிக் மற்றும் எம்.எஸ்.சி. இயற்பியல் துறை 2-ம் ஆண்டு மாணவர் ஹைசம் ஆகிய இருவரை பல்கலைக்கழக நிர்வாகம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்கள் பல்கலைக்கழக விடுதியை விட்டு உடனடியாக வெளியேறவும் ஆணையிடப்பட்டுள்ளது. இவர்களுடன் உடனிருந்த மாணவி ஒருவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட அக்னி அஷிக், எஸ்.எப்.ஐ. மாணவர் அமைப்பின் பல்கலைக்கழகச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், பாரதிய ஜனதா கட்சியினர் பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு திரண்டு நிர்வாகத்தின் மெத்தனப் போக்கைக் கண்டித்துக் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளிக்க ஏ.பி.வி.பி. அமைப்பினர் முடிவு செய்துள்ளதால் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பதற்றமான சூழல் நிலவுகிறது.
English summary: Puducherry Central University suspended two students after slogans about Prime Minister Narendra Modi and the RSS were reportedly found sprayed on a campus wall. According to the report, the university said the students admitted to the writing, and they were also ordered to vacate the hostel, while a woman student seen with them is being questioned. One of those suspended is the SFI’s university secretary. ABVP members had petitioned the registrar, the BJP held a protest, and ABVP said it plans to complain to the Union Home Ministry.

