புதுச்சேரி

புதுச்சேரியில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை: குடியிருப்பு பகுதிகளில் புகுந்த வெள்ளம் – களத்தில் இறங்கி ஆய்வு செய்த கவர்னர், அமைச்சர்!

புதுச்சேரி, அக். 25:
புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு தாழ்வான குடியிருப்புப் பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகப் பெய்து வரும் இந்தத் தீவிர மழையைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளைத் துணைநிலை ஆளுநர், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

புதுவையில் நேற்று மாலை முதல் பெய்யத் தொடங்கிய மழை, இரவு முழுவதும் விடிய விடிய கொட்டித் தீர்த்தது. குறிப்பாக நேற்று மாலை 5.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரையான காலகட்டத்தில் மட்டும் சுமார் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் ரெயின்போ நகர், சூரியகாந்தி நகர், பூமியான்பேட்டை, கிருஷ்ணா நகர் மற்றும் எழில் நகர் உள்ளிட்ட பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் குடியிருப்பு வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், வீட்டு உபயோகப் பொருட்கள் தண்ணீரில் மூழ்கிப் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

வெள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து, துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன் நோணாங்குப்பம் மற்றும் சுண்ணாம்பு ஆறு நீரோட்டப் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பாலத்தில் ஏற்பட்டிருந்த நீரோடை அடைப்புகளை உடனடியாகச் சரிசெய்து வெள்ள நீர் வடிய உரிய உத்தரவுகளைப் பிறப்பித்தார். இதேபோல், பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து சிவாஜி சிலை சந்திப்பு, கிருஷ்ணா நகர், எழில் நகர் உள்ளிட்ட வெள்ளம் பாதித்த பகுதிகளைக் குடைபிடித்தபடி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது மழைநீரை மின்மோட்டார்கள் மூலம் துரிதமாக வெளியேற்றவும், வடிகால் வாய்க்கால்களில் ஏற்பட்டுள்ள கழிவு அடைப்புகளை உடனடியாகத் தூர்வாரவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். அப்பகுதி பொதுமக்கள் மழைநீர் தேங்குவதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். மேலும் தட்டாஞ்சாவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் தத்தமது தொகுதிகளில் முகாமிட்டு நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். புதுச்சேரி நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன