புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதியில் தூய்மைப் பணி மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்: எம்எல்ஏ அசோக் ஆனந்த் ஆலோசனை

புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொது சுகாதாரத்தைப் பேணவும், தூய்மைப் பணிகள் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் நகராட்சி அலுவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுடன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

தட்டாஞ்சாவடி தொகுதி மக்களின் அடிப்படை சுகாதாரத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் நோக்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் ‘கிரீன் வாரியர்’ குழுவினர் கலந்துகொண்டனர். குடியிருப்புகள் மற்றும் வணிகப் பகுதிகளில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுதல், மழைநீர் வடிகால்களைத் தூர்வாரி நீர் சீராக வடிய வழிவகை செய்தல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும், பருவமழை மற்றும் பருவநிலை மாற்றங்களால் பரவக்கூடிய டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அனைத்துப் பகுதிகளிலும் கொசு ஒழிப்புப் பணிகளை முடுக்கிவிட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மருந்து தெளித்தல், சுகாதாரக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துதல் மற்றும் கழிவுநீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்தல் ஆகியவை குறித்து அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டது.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் புகார்கள் குறித்தும் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு, அவற்றுக்கு முன்னுரிமை அளித்து விரைந்து தீர்வு காணுமாறு நகராட்சி அதிகாரிகளை சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் கேட்டுக்கொண்டார். தொகுதி மக்களின் நலன் கருதி தொடர்ச்சியாக இத்தகைய தூய்மை மற்றும் சுகாதாரப் பணிகள் கள ஆய்வுகளுடன் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன