மத்திய அரசைத் தொடர்ந்து புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி 53% ஆக உயர்வு: அரசாணை வெளியீடு!
புதுச்சேரி, நவ. 5:
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை (DA) 53 சதவீதமாக உயர்த்தி புதுச்சேரி அரசு முறைப்படி அரசாணை வெளியிட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சகம் கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்ட அறிவிக்கையின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தற்போதைய 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக 3 சதவீதம் உயர்த்தப்பட்டது. இந்த 3 சதவீத அகவிலைப்படி உயர்வானது கடந்த ஜூலை 1-ஆம் தேதியை முன்தேதியிட்டு நடைமுறைக்கு வரும் என்றும், ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி கணக்கிடப்படும் அடிப்படை ஊதியத்துக்கு இது பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றி புதுச்சேரி அரசும் தனது அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி நிதித்துறை சார்புச் செயலர் சிவக்குமார் அனைத்துத் துறைத் தலைவர்களுக்கும் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை மற்றும் குறிப்பாணையை அனுப்பியுள்ளார்.
அந்த உத்தரவில், புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 50 சதவீதத்திலிருந்து 53 சதவீதமாக உயர்த்தப்படுவதாகவும், இந்த உயர்வு கடந்த ஜூலை 1-ஆம் தேதியை முன்தேதியிட்டு கணக்கிடப்பட்டு நிலுவைத் தொகையுடன் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் உள்ள அரசுச் செயலகத் துறைகள் மற்றும் அனைத்துத் துறை அலுவலகங்களில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பயனடைவர்.

