நெடுங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் விக்னேஸ்வரன் திடீர் ஆய்வு

காரைக்கால்: நெடுங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்ற நெடுங்காடு – கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மக்கள் மருத்துவர் டாக்டர் V. விக்னேஸ்வரன் MBBS, அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து விரிவான கள ஆய்வு மேற்கொண்டார்.
காரைக்கால் மாவட்டத்தின் முக்கிய கிராமப்புறப் பகுதியான நெடுங்காட்டில் செயல்பட்டு வரும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், பொதுமக்களுக்கு தடையின்றி தரமான மருத்துவச் சேவைகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் இந்த ஆய்வினை மேற்கொண்டார்.
ஆய்வின் போது, ஆரம்ப சுகாதார நிலையத்தின் தினசரி செயல்பாடுகள், அவசர சிகிச்சைப் பிரிவு, மருந்து மாத்திரைகளின் இருப்பு, பிரசவ வார்டு மற்றும் ஆய்வகப் பிரிவுகள் ஆகியவற்றை அவர் நேரில் பார்வையிட்டார். சிகிச்சைக்காக வந்திருந்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த அவர், ஏழை எளிய மக்களுக்கு எவ்வித தாமதமும் இன்றி விரைவாக மருத்துவ சேவைகள் கிடைக்க வேண்டும் என்று பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், அங்கு பணியாற்றும் அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவத் துறை பணியாளர்களுடன் கலந்துரையாடிய சட்டமன்ற உறுப்பினர், மருத்துவமனைக்குத் தேவையான கூடுதல் மருத்துவ உபகரணங்கள், அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பணியாளர் தேவைகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார். கிராமப்புற மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆரம்ப சுகாதார நிலையத்தின் தேவைகளை புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறை கவனத்திற்கு எடுத்துச் சென்று விரைந்து நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.இந்த ஆய்வின்போது ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தொகுதி முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.


