புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதி அங்கன்வாடி மையங்களை மேம்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் ஆலோசனை!

புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களின் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளைப் புதுப்பித்து மேம்படுத்துவது தொடர்பாக, தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.

குழந்தைகளின் ஆரம்பகால வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்வதில் அங்கன்வாடி மையங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நிலையில், தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உட்பட்ட அங்கன்வாடி மையங்களின் தற்போதைய கட்டட அமைப்புகள், குடிநீர் வசதி, சுகாதாரமான கழிப்பறை வசதிகள் மற்றும் மின்சார பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வைத்தியநாதனுடன் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் தீவிரமாக ஆய்வு செய்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, அங்கன்வாடி மையங்களுக்கு வரும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான, தூய்மையான மற்றும் சுகாதாரமான ஒரு உன்னத சூழலை அமைத்துக் கொடுப்பதே தங்களின் தலையாய நோக்கம் என்று எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் தெரிவித்தார். இதற்காக பழுதடைந்த மையங்களைச் சீரமைப்பதுடன், போதிய இடவசதி, வர்ணம் பூசுதல் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

மேலும், தொகுதிக்குட்பட்ட அனைத்து அங்கன்வாடிகளிலும் கள ஆய்வு மேற்கொண்டு தேவையான பணிகளுக்கான திட்ட மதிப்பீடுகளை உடனடியாகத் தயாரிக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்குக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு முழுமையாக நிறைவேற்றப்படும் பட்சத்தில், அப்பகுதி குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் பெருமளவில் பயனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன