புதுச்சேரி

விலைவாசி உயர்வை கண்டித்து 31ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

புதுச்சேரி, அக்டோபர் 28: விலைவாசி உயர்வை கண்டித்து வரும் 31ஆம் தேதி பெண்களை ஒன்று திரட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற உள்ளதாக கட்சியின் மாநில செயலாளர் சலீம் அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் சலீம், தேர்தலுக்கு பிறகு பொறுப்பேற்ற என்ஆர் காங்கிரஸ் பாரதிய ஜனதா அரசு ஸ்தம்பித்துள்ளதாக புகார் தெரிவித்தார். சபாநாயகரை கூட தேர்வு செய்ய முடியாத நிலையில் அரசும், மக்கள் பிரச்சனைகளை பேச சரியான எதிர்கட்சிகளும் இல்லை என அவர் சாடினார். மேலும், மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் குரல் கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது தலையாய பிரச்சனையாக உணவு பிரச்சனை உள்ளதென்றும், கடந்த மூன்று மாதத்தில் 20 சதவீதம் வரை உணவு பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசுக்கு அக்கரை இல்லை என தெரிவித்த அவர், இதனால் கூலி தொழிலாளர்கள் அவதிக்கு ஆளாகி உள்ளதாக கூறினார். அரசே அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் வழங்கிட வேண்டும் என்றும், பொது வினியோக திட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்த கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். குறிப்பாக கிட்டத்தட்ட 300 ரேஷன் கடைகளை திறந்து அரிசி உள்ளிட்ட பொது விநியோக திட்டம் மூலமாக அத்தியாவசிய உணவு பொருட்களை கொடுக்க வேண்டும் என்றும், அந்தோயோதய அன்னயோஜனா திட்டம் மற்றும் உணவு பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வறுமையில் வாடும் ஏழை மக்களுக்கு இதனால் கொஞ்சம் நிவாரணம் கிடைக்கும் என்று தெரிவித்த அவர், இவற்றை வலியுறுத்தி வரும் 31ஆம் தேதி குடிமை பொருள் வழங்கல் துறை முன்பு பெண்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தார்.

முன்னதாக கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி, புதுச்சேரியில் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியைக் கட்டுப்படுத்தக் கோரியும், நியாயவிலைக் கடைகள் மூலம் மானிய விலையில் பொருட்களை வழங்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகம் மற்றும் காந்தி வீதி அமுதசுரபி தலைமை அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன