காரைக்காலில் அன்னை பவுண்டேஷன் சார்பில் 113 ஆதரவற்ற சடலங்களுக்கு நல்லடக்கம்
காரைக்கால், அக்டோபர் 28: காரைக்காலில் அன்னை பவுண்டேஷன் சார்பில் இதுவரை அடையாளம் தெரியாத மற்றும் ஆதரவற்ற 113 சடலங்களுக்கு உரிய முறையில் இறுதிச் சடங்கு செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அன்னை பவுண்டேஷன் நிறுவனர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஆதரவற்ற முதியோர்களை மீட்டு இல்லங்களில் சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு மனிதநேய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்த கிருஷ்ணவேணி உடல்நலக் குறைவால் உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரின் ஒப்புதலுடன் உடல் காரைக்கால் விநாயக மிஷன் மருத்துவக் கல்லூரிக்கு கல்வி மற்றும் ஆராய்ச்சி பயன்பாட்டிற்காக தானமாக வழங்கப்பட்டது. இதன் மூலம் இரண்டாவது முறையாக மருத்துவ மாணவர்களின் கல்விக்காக உடல் தானமாக வழங்கப்பட்டுள்ளது என்றும், தொடர்ந்து ஆதரவற்றோருக்கான மனிதநேய சேவைகளைத் தொடர்வோம் என்றும் நிறுவனர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.