லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை ஒட்டி புதுச்சேரியில் மாணவ மாணவிகள் மாரத்தான்
புதுச்சேரி, அக்டோபர் 28: லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை ஒட்டி புதுச்சேரியில் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் போட்டி கடற்கரை சாலையில் நடைபெற்றது.
மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல் படி அக்டோபர் 26ஆம் தேதி முதல் நவம்பர் 1ஆம் தேதி வரை லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுற்றுலாத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற இந்த மாரத்தான் கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே தொடங்கியது. சுற்றுலாத்துறை ஆணையரும் செயலாளருமான மணிகண்டன் கொடியசைத்து மாரத்தானை தொடங்கி வைத்தார்.
பழைய சாராய ஆலை, ராஜா திரையரங்கம், கம்பன் கலையரங்கம், ரயில் நிலையம், தீயணைப்பு துறை அலுவலகம் மற்றும் டியூப்ளக்ஸ் சிலை வழியாக சென்ற மாணவர்கள் மீண்டும் காந்தி சிலை அருகே ஓட்டத்தை நிறைவு செய்தனர். புதுச்சேரி மற்றும் காரைக்காலை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று ஊழலுக்கு எதிராகவும் நேர்மையை வலியுறுத்தியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மாரத்தானில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு தொகையும் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்பட்டது.