அருணா புயல் எதிரொலி: வீராம்பட்டினத்தில் கடல் கொந்தளிப்பு காரணமாக 200 மீட்டர் தூரம் நீர் வெளியேற்றம்
புதுச்சேரி, அக்டோபர் 29: வங்கக்கடலில் உருவான அருணா புயல் ஆந்திர கடலோர பகுதியில் கரையை கடக்க தொடங்கிய நிலையில், புதுச்சேரி வீராம்பட்டினம் கடற்கரை பகுதியில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் வெளியேறியது.
அரியாங்குப்பத்தை அடுத்த வீராம்பட்டினம் கடற்கரை பகுதியில் நேற்று மாலை கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது. ஆக்ரோஷமாக எழுந்த ராட்சத அலைகள் கரையை கடந்து மோதியதால் கடல் நீர் வெளியேறியது. இதனால் அச்சமடைந்த மீனவர்கள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகுகளை கயிறு கட்டி இழுத்து மேடான பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக நிறுத்தினர். இரவு நேரத்தில் கடல் சீற்றம் அதிகரித்து கடல்நீர் மேலும் கரையை நோக்கி வரக்கூடும் என மீனவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி அன்று வீராம்பட்டினம் கடலோரப் பகுதியில் கடல் நீர் வழக்கத்திற்கு மாறாக சீற்றத்துடன் காணப்பட்டதை தொடர்ந்து, அப்பகுதியில் அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் கா. ஐயப்பன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
