புதுச்சேரியில் புகையிலை இல்லா இளைஞர் நலன் பிரசாரத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ரங்கசாமி
புதுச்சேரி, அக்டோபர் 29: புதுச்சேரியில் புகையிலை இல்லா இளைஞர் நலன் பிரசாரம் 4.0 தொடக்க நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை முதலமைச்சர் என்.ரங்கசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை, தேசிய சுகாதார இயக்கம் மற்றும் தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம் சார்பில் புகையிலை இல்லா இளைஞர் நலன் பிரசாரம் 4.0 தொடங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 26ஆம் தேதி வரை 60 நாட்கள் நடைபெறும் இந்தப் பிரசாரத்தின் தொடக்கமாக கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர் மாணவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்று புகையிலையால் ஏற்படும் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, இளைஞர்களும் மாணவர்களும் புகையிலை மற்றும் போதைப்பொருள் பழக்கத்தை முற்றிலும் தவிர்த்து தங்கள் உடல்நலத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். புதுச்சேரி மாநிலத்தில் புகையிலை பழக்கம் இல்லாத ஒரு மாநிலமாக கொண்டுவர வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக புதுச்சேரியில் புகையிலை மற்றும் போதைப்பொருள் பழக்கங்களை ஒழிக்கும் நோக்கில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் குறிப்பிட்டார். இதுவரை மாநிலத்தில் 32 கிராமங்கள் காசநோய் இல்லாத கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 42 கிராமங்களை காசநோயற்ற கிராமங்களாக மாற்ற அரசு முயற்சி எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.