புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம்: தொகுதி வாரியாக களப்பணிகளை தீவிரப்படுத்த முடிவு!

புதுச்சேரி:
புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில், “ஜனநாயகத்தை காப்போம்! கும்பல் விரோத, தேச விரோத சக்திகளை வேரோடு அழிப்போம்!” என்ற அரசியல் விழிப்புணர்வு இயக்கத்தின் தொடர்ச்சியாக முக்கிய ஆலோசனைக் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் களப்பணி ஒருங்கிணைப்பாளர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
இந்த இயக்கத்தின் தொடர் நடவடிக்கையாக, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் தீவிர களப்பணிகளை மேற்கொள்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் வசிக்கும் முக்கியப் பிரமுகர்கள், சமுதாயப் பெரியவர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளை நேரில் சந்தித்து உரையாடுவது குறித்தும், இதற்காகப் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழுவுடன் விரிவான செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டன.
நம் நாட்டின் ஜனநாயக மாண்புகளையும், புதுச்சேரி பிராந்தியத்தின் சமூக அமைதியையும் சீர்குலைக்க முயலும் கும்பல் விரோத மற்றும் தேச விரோத சக்திகளுக்கு எதிராக பாஜக தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், நாட்டின் ஒருமைப்பாட்டைக் காக்கவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தீவிரப் பிரச்சாரங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
தொகுதி வாரியாக பூத் அளவிலான கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்துவது, பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து ஜனநாயக விரோத சக்திகளின் உண்மை முகத்தை வெளிப்படுத்துவது உள்ளிட்ட அடுத்தகட்ட களப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. வரும் நாட்களில் புதுச்சேரி முழுவதும் இந்த இயக்கம் முழு வீச்சில் முன்னெடுக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.