தமிழ்நாடு

பி.எம். மன்னன் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்: தவெக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என சாடல்!

சென்னை: அஇஅதிமுக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளரும், மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயருமான பி.எம். மன்னன் கைது செய்யப்பட்டதற்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொய் வழக்குகள் மூலம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஆளும் கட்சி ஈடுபடுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “கழக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளரும், மதுரை முன்னாள் துணை மேயருமான திரு. P.M. மன்னன் அவர்களை பொய் வழக்கில் கைது செய்துள்ள தவெக அரசின் ஏவல்துறைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா மூலம் ஒரு புனையப்பட்ட கட்டுக்கதையை உருவாக்கி, கழக நிர்வாகி மன்னனை கைது செய்திருப்பது வெட்கக்கேடான அரசியல் நாடகம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஆளும் கட்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், குதிரை பேரம் நடத்துவது மற்றும் கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகளைக் குறிவைத்து வளைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஆளும் தரப்பு ஈடுபட்டு வருவதாகச் சாடினார். முதலமைச்சரை நேரடியாக அணுக முடியாமல் பல அதிகார மையங்களுக்கு நடுவே ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களே கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், சொந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்களைச் சமாதானப்படுத்த வழி தெரியாமல் திசைதிருப்பும் நோக்கில் இத்தகைய பொய் வழக்குகள் புனையப்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

பழைய சினிமா பாணியில் பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழியைச் சுமத்தும் தந்திரங்கள் நீண்ட காலம் எடுபடாது என்றும், இறுதியில் ஆட்சியாளர்களின் உண்மை முகமே மக்களுக்கு வெட்டவெளிச்சமாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். தரம் தாழ்ந்த அரசியல் சித்து விளையாட்டுகளை உடனடியாக நிறுத்திக்கொண்டு, கைது செய்யப்பட்டுள்ள பி.எம். மன்னனை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன