காரைக்கால் காமராஜர் சாலையில் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து: பண்டிகைக் காலம் வரை கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்க பொதுமக்கள் கோரிக்கை!
காரைக்கால்:
காரைக்கால் நகரப் பகுதியில் பண்டிகைக் கால நெரிசலைத் தவிர்க்கும் வகையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், காமராஜர் சாலையில் ஏற்பட்டுள்ள கடுமையான போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த கனரக வாகனப் போக்குவரத்துக்குத் தற்காலிகத் தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரைக்காலில் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு திருநள்ளாறு சாலை மற்றும் மாதாகோவில் வீதி ஆகியவை காவல்துறையினரால் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் செல்ல வேண்டிய கார்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் அனைத்தும் காமராஜர் சாலை வழியாகத் திருப்பி விடப்படுவதால், அங்கு வாகனப் போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஏற்கனவே குறுகிய சாலையான காமராஜர் சாலையில், கடைகளுக்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை ஆங்காங்கே சாலையோரங்களில் நிறுத்திச் செல்வதால் சாலை மேலும் சுருங்கிப் போகிறது. இத்தகைய சூழலில், அவ்வழியாகத் தொடர்ந்து இயக்கப்படும் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நாள்தோறும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் அவசர ஊர்திகள் நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், காமராஜர் சாலையில் நிலவும் இந்த இடர்பாட்டுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பண்டிகைக் காலம் முடியும் வரையிலாவது காமராஜர் சாலையில் கனரக வாகனங்கள் நுழைவதற்கு முழுமையாகத் தடை விதித்து, அவற்றை மாற்றுப் பாதையில் இயக்க மாவட்ட நிர்வாகமும் போக்குவரத்துக் காவல்துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
English summary: Residents and motorists have asked for a temporary ban on heavy vehicles on Kamarajar Road in Karaikal because of severe congestion. According to the report, police have made Thirunallar Road and Madha Koil Street one-way for the festival season, diverting cars, two-wheelers and autos to Kamarajar Road, which is already narrow and lined with parked vehicles; lorries and other heavy vehicles add to the jams, delaying school students and emergency vehicles. They want the district administration and traffic police to bar heavy vehicles from the road at least until the festival period ends.



