காரைக்கால்

காரைக்கால்: நிரவியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தலையாரிக்குட்டை வடிகால் சீரமைப்பு பணி தொடக்கம்!

காரைக்கால்:
காரைக்கால் மாவட்டம் நிரவி பகுதியில் சுமார் 30 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாமல் தூர்ந்து போயிருந்த தலையாரிக்குட்டை வடிகால் சீரமைக்கும் பணிகள் தீவிரமாகத் தொடங்கியுள்ளன. தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரத்தின் அறிவுறுத்தலின் பேரில் இப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

நிரவி பகுதியில் இஸ்லாமிய மக்கள் பெருமளவில் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் இந்த தலையாரிக்குட்டை வடிகால் அமைந்துள்ளது. கடந்த சுமார் 30 ஆண்டுகளாக இந்த வடிகால் முறையாகத் தூர்வாரப்படாமல் புதர் மண்டியும், தூர்ந்தும் காணப்பட்டதால், மழைக்காலங்களில் மழைநீர் சீராக வெளியேற முடியாமல் அப்பகுதி மக்கள் தொடர்ந்து கடும் இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர்.

பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, வடிகால் தூர்வாரும் பணிகள் நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் துரைராஜ் மற்றும் இளநிலைப் பொறியாளர் (JE) முருகன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது. வடிகாலில் தேங்கியுள்ள கழிவுகள் மற்றும் அடைப்புகள் நவீன இயந்திரங்கள் மூலம் முழுமையாக அகற்றப்பட்டு வருகின்றன.

இத்தூர்வாரும் பணிகள் முழுமையாக நிறைவடையும்போது, வரவிருக்கும் பருவமழை காலங்களில் கிளாஸ் ஸ்ட்ரீட் (Glass Street) உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்படும் கடுமையான மழைநீர் தேக்கப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களின் நீண்டகால அடிப்படைப் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவற்றுக்கு முன்னுரிமை அளித்து நிரந்தர தீர்வு காண்பதே மக்கள் சேவையின் தலையாய நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டு கால பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்த தொகுதி எம்எல்ஏ மற்றும் அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

English summary: Desilting of the Thalaiyarikuttai drain in Niravi, Karaikal, which had not been cleaned for about 30 years, has begun on the instruction of MLA T.K.S.M. Meenakshisundaram. The work started in the presence of Niravi commune panchayat commissioner Durairaj and junior engineer Murugan, and machines are clearing the blockages. It is expected to end the waterlogging near Glass Street in the monsoon, and residents praised the MLA and officials.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன