காரைக்கால்

காரைக்கால்: கோட்டுச்சேரி மேட்டில் புதிய பிஆர்டிசி பேருந்து சேவை – எம்.எல்.ஏ டாக்டர் வி.விக்னேஸ்வரன் கொடியசைத்து தொடக்கம்!

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு – கோட்டுச்சேரி தொகுதிக்கு உட்பட்ட கோட்டுச்சேரி மேடு பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அப்பகுதிக்கு புதிய பிஆர்டிசி (PRTC) பேருந்து சேவை முறைப்படி தொடங்கப்பட்டுள்ளது.

கோட்டுச்சேரி மேடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் முறையான அரசுப் பேருந்து வசதி இல்லாததால் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைக்குச் செல்லும் முதியவர்கள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்து வந்தனர். இதனால் அப்பகுதிக்குத் தடையற்ற பேருந்து வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடம் கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

பொதுமக்களின் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்று, புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (PRTC) மூலம் புதிய பேருந்து இயக்கத் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து, கோட்டுச்சேரி மேட்டில் நடைபெற்ற தொடக்க விழாவில் நெடுங்காடு – கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மக்கள் மருத்துவருமான டாக்டர் வி.விக்னேஸ்வரன் எம்.பி.பி.எஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, புதிய பிஆர்டிசி பேருந்து சேவையைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

முன்னதாக, இத்தொகுதியில் பொதுமக்களின் அடிப்படை நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில் விரிவான இலவச சிறப்பு மருத்துவ முகாமை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி.விக்னேஸ்வரன் தொடங்கி வைத்திருந்த நிலையில், தற்போது பொதுமக்களின் அத்தியாவசியப் போக்குவரத்துத் தேவையை நிறைவேற்றும் வகையில் இப்பேருந்து சேவை பயன்பாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புதிய பேருந்து சேவை இயக்கம் அப்பகுதி பள்ளி, கல்லூரி மாணவர்களின் தினசரி பயணத்தை எளிதாக்குவதுடன், கிராமப்புற இணைப்பு வசதியை மேலும் மேம்படுத்தும் எனப் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் அரசுத் துறை அதிகாரிகள், ஊர் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன