தமிழ்நாடு

தாம்பரம் – நாகர்கோவில் அந்த்யோதயா ரயில் பண்ருட்டியில் நின்று செல்ல வேண்டும்: மத்திய ரயில்வே அமைச்சரிடம் மனு!

பண்ருட்டி: தாம்பரம் – நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அந்த்யோதயா அதிவிரைவு ரயில் பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஆவன செய்ய வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் அல்லிமுத்து நேரில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தின் மிக முக்கிய வணிக மற்றும் விவசாய மையமாக பண்ருட்டி நகரம் விளங்கி வருகிறது. பலாப்பழம் மற்றும் முந்திரி உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இப்பகுதியில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களுக்கும் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பண்ருட்டி ரயில் நிலையத்தில் கூடுதல் விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது.

இந்த சூழலில், தாம்பரம் – நாகர்கோவில் இடையே இயக்கப்பட்டு வரும் அந்த்யோதயா அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 20691 / 20692) பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும் என மத்திய அரசு வழக்கறிஞரும், பாஜக மாநில செயலாளருமான அஸ்வத்தாமன் அல்லிமுத்து, புதுடெல்லியில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து விரிவான கோரிக்கை மனுவினை சமர்ப்பித்துள்ளார். இந்த மனுவில் பண்ருட்டி ரயில் நிலையத்தின் வருவாய் மற்றும் பயணிகளின் பயன்பாட்டுத் தேவைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

பண்ருட்டி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மத்திய அமைச்சரின் கவனத்திற்கு நேரில் கொண்டு சென்ற அஸ்வத்தாமன் அல்லிமுத்து அவர்களுக்கு பண்ருட்டி பொதுமக்கள் மற்றும் பண்ருட்டி ரயில் உபயோகிப்பாளர்கள் நலச் சங்கம் (PRT Train Users Welfare Association) சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த கோரிக்கையை தெற்கு ரயில்வே நிர்வாகம் பரிசீலித்து விரைந்து ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் தென் மாவட்டங்களுக்குப் பயணிக்கும் பண்ருட்டி பகுதி மக்கள் பெரும் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன