அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மடாலயம் மற்றும் போர் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மரியாதை!

தவாங்:
அருணாச்சலப் பிரதேச மாநிலம் தவாங்கில் நடைபெற்று வரும் 14-வது சர்வதேச சுற்றுலா சந்தை (International Tourism Mart 2026 – ITM) நிகழ்வின் ஒரு பகுதியாக, மத்திய சுற்றுலா மற்றும் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி, வரலாற்றுச் சிறப்புமிக்க தவாங் மடாலயம் மற்றும் தவாங் போர் நினைவிடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு வீரவணக்கம் செலுத்தினார்.
தவாங் பௌத்த மடாலயத்திற்கு வருகை தந்த மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, அப்பகுதியின் ஆன்மீக மேன்மை மற்றும் தனித்துவமான கலாச்சாரப் பாரம்பரியம் குறித்து கேட்டறிந்தார். இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த மடாலயம், அருணாச்சலப் பிரதேசத்தின் தொன்மையான பண்பாட்டுப் பெருமைகளை உலகிற்கு பறைசாற்றும் முக்கிய ஆன்மீகத் தலமாக விளங்குவதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, தவாங் போர் நினைவிடத்திற்குச் சென்ற மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி, நாட்டின் இறையாண்மை மற்றும் எல்லைப் பாதுகாப்பிற்காக தாய்நாட்டின் எல்லைப் பகுதியில் தன்னுயிர் ஈந்த வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து நெஞ்சார்ந்த வீரவணக்கம் செலுத்தினார். வீரர்களின் தன்னலமற்ற தியாகத்தை நினைவுகூர்ந்த அவர், போர் நினைவிடம் ஒவ்வொரு இந்தியரையும் நெகிழச் செய்யும் தேசிய அடையாளமாகத் திகழ்கிறது எனத் தெரிவித்தார்.
வடகிழக்கு மாநிலங்களின் சுற்றுலாப் பொருளாதாரத்தை சர்வதேச அரங்கில் பிரபலப்படுத்துவதற்காக ஒன்றிய அரசால் தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தவாங்கில் தற்போது நடைபெற்று வரும் 14-வது சர்வதேச சுற்றுலா மார்ட் நிகழ்வு, எல்லைப் பிராந்தியங்களின் உள்கட்டமைப்பு மற்றும் ஆன்மீக, சுற்றுச்சூழல் சுற்றுலா வாய்ப்புகளை உலக அளவில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
