புதுச்சேரி 45 அடி சாலையில் டி-மார்ட் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்: எம்.எல்.ஏ ஜோஸ் சார்லஸ் மார்டின் வலியுறுத்தல்!

புதுச்சேரி: புதுச்சேரி 45 அடி சாலையில் எச்.டி.எப்.சி வங்கி அருகில் நடைபெற்று வரும் டி-மார்ட் வணிக வளாகக் கட்டுமானப் பணிகள் மற்றும் ஆழமான மண் அகழ்வுப் பணிகளை, கூட்டுப் பாதுகாப்பு ஆய்வு மற்றும் அனைத்துத் துறை தடையில்லாச் சான்றுகள் பெறும் வரை உடனடியாகத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவருமான திரு. ஜோஸ் சார்லஸ் மார்டின் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரியின் முக்கிய போக்குவரத்து மற்றும் வணிக வழித்தடங்களில் ஒன்றாக 45 அடி சாலை விளங்கி வருகிறது. இந்நிலையில், அங்குள்ள எச்.டி.எப்.சி வங்கி அருகே பிரம்மாண்ட டி-மார்ட் வணிக நிறுவனத்திற்கான கட்டுமானப் பணிகள் மற்றும் அதிக ஆழத்திற்கு மண் அகழ்வு செய்யும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய பணிகளால் அப்பகுதியைச் சுற்றியுள்ள குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் சாலையில் பயணிக்கும் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்துத் துறையினரையும் உள்ளடக்கிய விரிவான கூட்டுப் பாதுகாப்பு ஆய்வு (Joint Safety Inspection) மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், கட்டட ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் பிற துறைகளின் அனைத்துத் தடையில்லாச் சான்றுகளும் (NOC) முறையாகப் பெறப்பட்டு விதிமுறைகள் முழுமையாக உறுதி செய்யப்படும் வரை, அங்கு நடைபெற்று வரும் மண் அகழ்வு உள்ளிட்ட பணிகளை அரசு நிர்வாகம் உடனடியாகத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நகரப் பகுதிகளில் அசுர வேகத்தில் பெருகிவரும் வணிகக் கட்டடங்கள் மற்றும் திட்டமிடப்படாத விரிவாக்கங்கள் காரணமாக அவ்வப்போது எழும் நகர்ப்புற பாதுகாப்புச் சிக்கல்களுக்கு மத்தியில், மக்கள் பிரதிநிதியின் இந்தக் கோரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுப்புறக் கட்டமைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே பணிகளைத் தொடர அனுமதிக்க வேண்டும் என்பதே தொகுதி மக்களின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது.