புதுச்சேரியில் அதிவேகமாக பைக் ஓட்டி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்: 4 பேர் மீது போக்குவரத்து போலீசார் அதிரடி வழக்குப்பதிவு!
புதுச்சேரி, நவம்பர் 2: புதுச்சேரி நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யவும், விபத்துகளைத் தடுக்கவும் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையின்போது, பொதுமக்களுக்கும் பிற வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் இருசக்கர வாகனங்களை ஓட்டிய 4 பேர் மீது தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரி மேற்கு போக்குவரத்து காவல் நிலைய போலீசார் வில்லியனூர் பைபாஸ் சாலையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக அதிவேகமாகவும், மற்ற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையிலும் அஜாக்கிரதையாக இயக்கப்பட்ட ஒரு இருசக்கர வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். விசாரணையில், வாகனத்தை ஓட்டிவந்தவர் வானூரைச் சேர்ந்த முகமது மான்ஃபோர்ட் (23) என்பது தெரியவந்தது. மேலும், அந்த பைக்கில் நிறுவனத்தின் அசல் வடிவமைப்பை மீறி கூடுதல் இரைச்சலை எழுப்பும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர் பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று புதுச்சேரி ராஜீவ் காந்தி சதுக்கம் பகுதியில் அதிவேகமாக பைக் ஓட்டிச் சென்ற இருவர் மீது வடக்கு போக்குவரத்து போலீசாரும், தவளக்குப்பம் சிக்னல் அருகே அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்கிய நபர் மீது தெற்கு போக்குவரத்து போலீசாரும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விதிகளை மீறி பைக் ரேசில் ஈடுபடுபவர்கள் மற்றும் அதிவேகமாக வாகனங்களை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை தொடரும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.


