அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி உதவி ரூ.5,000 வழங்கக் கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: நாராயணசாமி ஆவேசம்!
புதுச்சேரி, அக்.29: புதுச்சேரியில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை உதவித்தொகையாக ரூ.5,000 வழங்கக் கோரியும், தொழிலாளர் நல வாரியத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்றம் அருகே மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அகில இந்திய அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் மாநில தலைவர் பிரபுராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வெ.வைத்திலிங்கம், கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் முதலமைச்சர் வே.நாராயணசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று உரையாற்றினர். இதில் அமைப்புசாரா தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலத்திட்டங்களை உடனடியாக நிறைவேற்றக் கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியம் சிறப்பாக செயல்பட்டு தீபாவளி, பொங்கல் உதவித்தொகை, கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டன. ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சியில் எந்தவொரு மக்கள் நலத்திட்டங்களும் சரிவர நடைபெறவில்லை. 10,000 பேருக்கு அரசு வேலை தருவதாகக் கூறிவிட்டு, இதுவரை வெறும் 1,800 பேருக்கு மட்டுமே பணி வழங்கியுள்ளனர்” என்று விமர்சித்தார்.
மேலும் அவர், புதுவையில் முதியோர் உதவித்தொகை மற்றும் இலவச அரிசி நிதி பல மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும், ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் மற்றும் மதுபான பார்கள் திறப்பில் முறைகேடுகள் தலைவிரித்தாடுவதாகவும் ஆளும் அரசை கடுமையாக சாடினார். அமைப்புசாரா தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தொடர்ந்து போராடினாலே தங்கள் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.