தீபாவளி பலகாரங்களில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை: புதுச்சேரி உணவு பாதுகாப்புத்துறை அதிரடி எச்சரிக்கை!
புதுச்சேரி, அக்.29: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி உணவுப் பொருட்களில் கலப்படத்தை முற்றிலும் தடுக்கும் நோக்கில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் தீவிர கள ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.
உணவு பாதுகாப்பு ஆணையர் குமார், அலுவலகத் தலைவர் ரமேஷ் மற்றும் நியமிக்கப்பட்ட அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அம்மு, அனுபாவா, சுபாஷினி, பவித்ரா, அஸிலா ஜோதி, யாழினி, நமதி கிரண் ஆகியோர் அடங்கிய சிறப்புக் குழுவினர் பல்வேறு இனிப்பகங்கள், பேக்கரிகள் மற்றும் பலகாரத் தயாரிப்பு கூடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆய்வின் போது வணிகர்களுக்கு பல்வேறு கடுமையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, இனிப்புகள் தயாரிக்க தரமான பால், கோவா, மாவு மற்றும் சர்க்கரையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தூய்மை மற்றும் நோய்க்கிருமி தடுப்பு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, பலகாரம் சுடுவதற்கு ஒரே எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடாக்கவோ, ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெயைப் புதிய எண்ணெயுடன் கலக்கவோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேக்கரி பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் மைதா, மாவு வகைகள் தரமானதாக இருக்க வேண்டும் எனவும், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பொருட்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் மூலப்பொருட்களின் பட்டியல் கட்டாயம் இடம்பெற வேண்டும் எனவும் காலாவதியான பொருட்களை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்யக்கூடாது எனவும் எச்சரித்துள்ளனர்.
பொதுமக்கள் பண்டிகைக் காலங்களில் அங்கீகரிக்கப்பட்ட, நம்பகமான கடைகளில் மட்டுமே உணவுப் பொருட்களை வாங்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். பாக்கெட் உணவுகளை வாங்கும் போது லேபிளில் உள்ள காலாவதி தேதியை சரிபார்க்க வேண்டும். கெட்டுப்போன, நிறம் மற்றும் மணம் மாறிய இனிப்புகளை வாங்கவோ அல்லது உட்கொள்ளவோ வேண்டாம் என்றும், ஏதேனும் கலப்பட சந்தேகம் எழுந்தால் உடனடியாக உணவு பாதுகாப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் அரசு விதிமுறைகளை மீறி கலப்படத்தில் ஈடுபட்டாலோ, தரமற்ற உணவுகளை விற்றாலோ உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006-ன் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திட்டவட்டமாக எச்சரித்துள்ளனர்.