அனுமதியின்றி இயங்கும் ஸ்பாக்களை மூடி சீல் வைக்க வேண்டும்: புதுச்சேரி எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தல்
புதுச்சேரி, அக். 29:
புதுச்சேரி உழவர்கரை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உரிய அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கி வரும் ஸ்பா மற்றும் யூனிசெக்ஸ் சலூன்களை உடனடியாக மூடி சீல் வைக்க வேண்டும் என்று முத்தியால்பேட்டை தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் அதிகாரிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், சட்டம்-ஒழுங்கு சீனியர் எஸ்.பி. மற்றும் உழவர்கரை நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு அவர் அனுப்பியுள்ள மனுவில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். அதில், “உழவர்கரை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பல்வேறு ஸ்பா மற்றும் யூனிசெக்ஸ் சலூன்கள் உரிய திட்ட அனுமதி, காவல்துறை வழங்கும் தடையில்லாச் சான்றிதழ் (NOC) மற்றும் முறையான கட்டட உபயோகச் சான்றிதழ் உள்ளிட்ட கட்டாய ஆவணங்கள் எவையும் இன்றியே இயங்கி வருகின்றன” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், “இத்தகைய விதிமீறல் நிறுவனங்களை உடனடியாக மூட நகராட்சி நிர்வாகம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் அந்த உத்தரவுகளைச் சற்றும் மதிக்காமல் தொடர்ந்து சட்டவிரோதமாக அவை எவ்வாறு இயங்கி வருகின்றன?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே நகராட்சி, காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் இணைந்து அடுத்த 48 மணி நேரத்திற்குள் தீவிரக் கூட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அவ்வாறு விதிமீறி செயல்படும் நிறுவனங்களுக்கு உடனடியாக நோட்டீஸ் வழங்கி சீல் வைக்க வேண்டும் எனவும், ஆய்வு மேற்கொண்ட அறிக்கையை 7 நாட்களுக்குள் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். தவறும்பட்சத்தில், பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி தகவல் அறியும் உரிமைச் சட்டம், லஞ்ச ஒழிப்புத்துறை, மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தை நாட நேரிடும் என்றும் வையாபுரி மணிகண்டன் தனது மனுவில் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.
English summary: Muthialpet MLA Vaiyapuri Manikandan of the NR Congress has petitioned the Collector, the Senior SP (Law and Order) and the Uzhavarkarai Municipal Commissioner to close and seal spas and unisex salons in the Uzhavarkarai municipal area that, he says, operate without the required approvals. He asked for a joint inspection by municipal, police, fire and labour department officials within 48 hours and a report within 7 days, and said he would use the Right to Information Act and approach other bodies if no action is taken.
