புதுச்சேரி

அரியாங்குப்பம், முருங்கப்பாக்கத்தில் அடிக்கடி நாள் முழுவதும் மின்தடை: பொதுமக்கள் கடும் அவதி!

புதுச்சேரி, அக். 29:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட அரியாங்குப்பம் மற்றும் முருங்கப்பாக்கம் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிகளில் சமீபகாலமாக வாரம் ஒரு முறை முழு நாள் மின்வெட்டு அறிவிக்கப்பட்டு, மின்சாரம் துண்டிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. மரப்பாலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாகக் கூறி இந்த மின்தடை அமல்படுத்தப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், மின்தடை செய்யப்படும் நேரங்களில் அரியாங்குப்பம், முருங்கப்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உருப்படியான எந்தவிதப் பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மின்கம்பிகள் மற்றும் உயர் அழுத்த மின்வடங்களை உரசிச் செல்லும் மரக்கிளைகளைக் கூட மின்துறையினர் முறையாக வெட்டி அகற்றுவதில்லை எனக் கூறப்படுகிறது. இத்தகைய காரணங்களால் வாரந்தோறும் நாள் முழுவதும் ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள், இல்லத்தரசிகள் அன்றாட பணிகளைச் செய்ய முடியாமல் பெரும் தவிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும், வளர்ந்து வரும் பகுதிகளான முருங்கப்பாக்கம் விரிவு மற்றும் அரியாங்குப்பம் விரிவு பகுதிகளில் நடைபெறும் கட்டிட கட்டுமானப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, தினக்கூலி தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. இப்பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மின்சாரம் இன்றி பள்ளி மாணவர்களும், சிகிச்சைக்காக வரும் நோயாளிகளும் புழுக்கத்திலும் வெப்பத்திலும் அவதிப்படும் சூழல் நிலவுகிறது.

எனவே, மின்துறை நிர்வாகம் அவசியமின்றி அடிக்கடி முழுநேர மின்தடை அறிவிப்பதை கைவிட்டு, சீரான தடையில்லா மின்சார விநியோகத்தை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.டி. ஆறுமுகம் மற்றும் அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஆகியோர் இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன