பல் மருத்துவக் கல்லூரி கணக்கிலிருந்து மாயமான ரூ.8.84 கோடி: பணத்தை ஒப்படைக்க HDFC வங்கி ஒப்புதல் – துணைநிலை ஆளுநர் அதிரடி!
புதுச்சேரி, நவ. 05:
புதுச்சேரி கோரிமேட்டில் இயங்கி வரும் மகாத்மா காந்தி அரசு முதுநிலை பல் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வங்கி கணக்கிலிருந்து, அண்மையில் மர்ம நபர்களால் இணைய வழியில் நூதன முறையில் சுமார் ரூ.8.84 கோடி சுருட்டப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த சூழலில், துணைநிலை ஆளுநர் கே. கைலாசநாதன் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு தீவிர விசாரணை நடத்தினார். ஆளுநர் மாளிகைக்கு HDFC வங்கியின் மண்டல மேலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட கிளை மேலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை நேரில் நேரில் வரவழைத்த ஆளுநர், வங்கி பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் இவ்வளவு பெரிய தொகை கைமாறிய விதம் குறித்து சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.
ஆளுநரின் கிடுக்கிப்பிடி விசாரணையைத் தொடர்ந்து, வாடிக்கையாளரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், வங்கி நடைமுறைகளில் ஏற்பட்ட குறைபாடுகளை கருத்தில் கொண்டும் மோசடி போன ரூ.8.84 கோடி தொகையையும் அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு முழுமையாக திருப்பி ஒப்படைக்க HDFC வங்கி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக சம்மதம் தெரிவித்தது.
இதனையடுத்து, வங்கி நிர்வாகத்திடம் இருந்து அத்தொகையை முறைப்படி மீட்டு மருத்துவக் கல்லூரி கணக்கில் உடனடியாக சேர்க்க உரிய சட்டப்பூர்வ மற்றும் புலனாய்வு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு புதுச்சேரி சைபர் கிரைம் போலீசாருக்கு துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் உத்தரவிட்டுள்ளார்.

