புதுச்சேரியில் தீபாவளி தீவிர ஆய்வு: தரமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல்; ரூ.40 ஆயிரம் அபராதம் விதிப்பு!
புதுச்சேரி, நவ. 05:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அதிகளவில் இனிப்புகள், கார வகைகள் மற்றும் பேக்கரி உணவுப் பொருட்களை வாங்குவது வழக்கம். இதனைப் பயன்படுத்தி கலப்பட அல்லது தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கில், புதுச்சேரி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக புதுச்சேரி உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அதிகாரி பாலகிருஷ்ணன் தகவல் தெரிவிக்கையில், நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள இனிப்பகங்கள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்சோதனையின் போது பொதுமக்களின் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த தரமற்ற, காலாவதியான உணவுப் பொருட்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
மேலும், சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்த மற்றும் பாதுகாப்பு விதிகளை மீறிய கடைகளுக்கு இதுவரை ரூ.40 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உணவு தயாரிப்பாளர்கள் தரமான மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், கலப்படப் பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.