புதுச்சேரியில் நில அளவைப் பணிகள் நவீனமயம்: புதிய சீர்திருத்தங்கள் மற்றும் கட்டணங்களை அறிவித்தது அரசு!

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் இயங்கி வரும் நில அளவை மற்றும் நில ஆவணங்கள் இயக்ககம் சார்பில், பொதுமக்கள் மற்றும் நில உரிமையாளர்கள் நில அளவை சேவைகளை விரைவாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் பெறும் வகையில் புதிய சீர்திருத்தங்கள் மற்றும் புதிய கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் உரிமம் பெற்ற நில அளவையாளர்கள் மற்றும் வரைபட வரைவாளர்களின் சேவைகளைப் பொதுமக்கள் மற்றும் அரசுத் துறைகள் நேரடியாகவும் எளிதாகவும் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நிலங்களின் எல்லைகளை நிர்ணயித்தல் மற்றும் தற்காலிக நிவாரணப் பணிகளை விரைந்து முடிக்கும் நோக்கில் இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த 2019-ஆம் ஆண்டு நடைமுறையைத் தொடர்ந்து, பாரம்பரிய சங்கிலி அளவை முறையுடன் நவீன தொழில்நுட்பங்களான மின்னணு மொத்த நிலையக் கருவி (Electronic Total Station – ETS), தொடர்ச்சியான செயல்பாட்டு குறிப்பு நிலையங்கள் (CORS) மற்றும் வேறுபாட்டு உலகளாவிய நிலைநிறுத்த முறை (DGPS) போன்ற அதிநவீன கருவிகள் மூலம் அளவைப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
நிலங்களின் பரப்பளவிற்கேற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய கட்டண விவரங்கள்:
1. 5,000 சதுர அடிக்குக் குறைவான நிலங்களுக்கு ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.400.
2. 5,000 முதல் 10,000 சதுர அடி வரையிலான நிலங்களுக்கு ரூ.600.
3. 10,000 முதல் 20,000 சதுர அடி வரையிலான நிலங்களுக்கு ரூ.800.
4. 20,000 முதல் 30,000 சதுர அடி வரையிலான நிலங்களுக்கு ரூ.1,000.
5. 30,000 சதுர அடிக்கு மேற்பட்ட நிலங்களுக்கு ரூ.1,300.
6. ஒரு ஏக்கருக்கு மேல் உள்ள நிலங்களுக்கு, ஒவ்வொரு கூடுதல் 10 ஏக்கருக்கும் தலா ரூ.200 கூடுதல் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் மாதாந்திர சேவைக் கட்டணமாக 26 வேலை நாட்களுக்கு ரூ.25,000, வாராந்திர சேவைக் கட்டணமாக 6 நாட்களுக்கு ரூ.5,000 மற்றும் தினசரி சேவைக் கட்டணமாக ரூ.1,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உரிமம் பெற்ற நில அளவையாளர்கள் மற்றும் நில வரைபட வரைவாளர்கள் தங்களது பணிகளை முறையான பதிவேடுகளுடன் மேற்கொண்டு, நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி பொதுமக்களுக்கு குறித்த காலத்தில் சேவை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இச்சேவை தொடர்பான முழு விவரங்களை https://puducherry-dt.gov.in மற்றும் https://revenue.py.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம் என வருவாய்த்துறை தெரிவித்துள்ளது.
