புதுச்சேரி

புதுச்சேரி ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு தீபாவளி பரிசு: இலவச துணிக்கு பதில் ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு!

புதுச்சேரி, நவ.6:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், சமூகப் பாதுகாப்பிற்காகவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் வழங்கப்படும் இலவச வேட்டி-சேலைக்கு மாற்றாக, பயனாளிகளின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக ரொக்கப் பணம் செலுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடும்ப உறுப்பினர்களுக்கும் தலா ரூ.1,000 வீதம் நிதி உதவி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், புதுச்சேரி பிராந்தியத்தைச் சேர்ந்த 1,03,423 பயனாளிகள், காரைக்கால் பிராந்தியத்தைச் சேர்ந்த 25,525 பயனாளிகள் மற்றும் ஏனாம் பிராந்தியத்தைச் சேர்ந்த 4,942 பயனாளிகள் என மொத்தம் 1,33,890 பேர் பயன்பெறுகின்றனர். இதற்காக அரசு சார்பில் மொத்தம் ரூ.13 கோடியே 38 லட்சத்து 90 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியுதவியானது சம்பந்தப்பட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இன்று நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது. பண்டிகைக் காலத்தில் அரசு வழங்கியுள்ள இந்த நேரடி பணப் பரிவர்த்தனை ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன