புதுச்சேரி

லாசுப்பேட்டையில் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணி: அமைச்சர் வி.பி.சிவக்கொழுந்து பூமி பூஜை செய்து தொடக்கம்!

புதுச்சேரி:

புதுச்சேரி மாநிலம் லாசுப்பேட்டை தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, டோபிகனா மற்றும் மடுவுபேட் ஆகிய பகுதிகளில் பழுதடைந்து காணப்பட்ட பழைய குடிநீர் குழாய்களை அகற்றிவிட்டு, புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் முறைப்படி தொடங்கப்பட்டுள்ளன.

லாசுப்பேட்டை தொகுதியின் டோபிகனா மற்றும் மடுவுபேட் குடியிருப்புப் பகுதிகளில் பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்த குடிநீர் விநியோகக் குழாய்கள் பழுதடைந்தும், உடைப்பு ஏற்பட்டும் காணப்பட்டன. இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு சீரான மற்றும் தூய்மையான குடிநீர் கிடைப்பதில் பல்வேறு சிரமங்கள் நீடித்து வந்தன. இதனைச் சரிசெய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பொதுப்பணித்துறை மூலம் புதிய குடிநீர் குழாய்கள் அமைப்பதற்கும், வீடுகளுக்கான குடிநீர் சேவை இணைப்புகளை (House Service Connection) நவீன முறையில் மாற்றி அமைப்பதற்கும் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டமிடப்பட்டது. இதையடுத்து, இதற்கான பூமி பூஜை மற்றும் பணிகளை அமைச்சர் வி.பி.சிவக்கொழுந்து நேரில் கலந்துகொண்டு முறைப்படி தொடங்கி வைத்தார்.

இப்பணிகள் நிறைவடையும் பட்சத்தில் டோபிகனா மற்றும் மடுவுபேட் பகுதி மக்களுக்குத் தங்குதடையின்றி, சீரான அழுத்தத்துடன் சுகாதாரமான குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்படும். பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி, குறித்த காலத்திற்குள் விரைந்து பணிகளைத் தரமாக முடிக்குமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன