காரைக்கால் விவசாயிகளுக்கு ரூ.2.89 கோடி பயிர் உற்பத்தி ஊக்கத்தொகை: முதல்வர் ரங்கசாமி காசோலை வழங்கினார்!

புதுச்சேரி: பயிர் உற்பத்தி தொழில்நுட்பத் திட்டத்தின் கீழ், காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 2,165 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.2 கோடியே 89 லட்சத்து 95 ஆயிரத்து 970 மதிப்பிலான பயிர் உற்பத்தி ஊக்கத்தொகைக்கான காசோலைகளை மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் ந.ரங்கசாமி அவர்கள் வழங்கினார்.
புதுச்சேரி யூனியன் பிரதேச வேளாண் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பயிர் உற்பத்தி தொழில்நுட்பத் திட்டத்தின் கீழ், பருத்தி மற்றும் பயறு வகை பயிர்களை சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் உற்பத்தி ஊக்கத்தொகை அரசால் உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பருத்தி சாகுபடி செய்யும் பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.11,000-ம், உளுந்து பயறு சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.5,000-ம் ஊக்கத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அட்டவணைப் பிரிவு விவசாயிகளுக்கு பருத்தி சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.12,000 மற்றும் உளுந்து பயறு சாகுபடிக்கு ரூ.6,000 வீதம் உயர்த்தப்பட்ட நிதி வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 2025-2026-ஆம் ஆண்டில் பருத்தி மற்றும் உளுந்து உள்ளிட்ட பயறு வகைகளை வெற்றிகரமாக சாகுபடி செய்த விவசாயிகள் கணக்கெடுக்கப்பட்டனர். இதில் பொதுப்பிரிவைச் சேர்ந்த 1,911 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.2,57,02,990 (ரூபாய் இரண்டு கோடியே ஐம்பத்து ஏழு லட்சத்து இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறு மட்டும்) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதேபோன்று, அட்டவணைப் பிரிவைச் சேர்ந்த 254 விவசாயிகளுக்கு ரூ.32,92,980 (ரூபாய் முப்பத்து இரண்டு லட்சத்து தொண்ணூற்று இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து எண்பது மட்டும்) வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பொதுப்பிரிவு மற்றும் அட்டவணைப் பிரிவு என ஒட்டுமொத்தமாக 2,165 விவசாயிகள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர்.
இதற்கான மொத்தத் தொகையான ரூ.2,89,95,970-க்கான காசோலைகளை காரைக்கால் மாவட்ட விவசாயப் பெருமக்களுக்கு முதலமைச்சர் ந.ரங்கசாமி முறைப்படி வழங்கி வாழ்த்து தெரிவித்தார். காரைக்கால் டெல்டா பகுதிகளில் மாற்றுப் பயிர் சாகுபடியை ஊக்கப்படுத்தவும், விவசாயிகளின் வருவாயைப் பெருக்கவும் இந்த அரசு தொடர்ந்து உறுதுணையாக நிற்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


