அழிவின் விளிம்பில் உள்ள தமிழ் காமிக்ஸ் துறையை அரசின் ஆதரவோடு பாதுகாக்க வேண்டும்: வல்லுநர்கள் வலியுறுத்தல்
புதுச்சேரி, அக்டோபர் 28: புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனத்தில் தமிழ் காமிக்ஸ் மற்றும் காட்சி பண்பாடு என்ற தலைப்பில் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
எழுத்தாளரும் ஆய்வாளருமான கண்ணன் முத்துகிருஷ்ணன் ஒருங்கிணைத்த இந்நிகழ்வில், பதிப்பாளர் கலீல், முனைவர் பிரபாவதி மற்றும் காமிக்ஸ் கலைஞர் செந்தில் செல்வம் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
தமிழ் காமிக்ஸ் இதழ்கள் சமூக பண்பாட்டு வரலாற்றின் முக்கிய ஆவணங்களாக விளங்குவதாகக் குறிப்பிட்ட வல்லுநர்கள், பழைய காமிக்ஸ் இதழ்களைப் பாதுகாக்கவும் முன்னோடி கலைஞர்களின் பங்களிப்பை ஆவணப்படுத்தவும் வலியுறுத்தினர்.
அழிவின் விளிம்பில் உள்ள தமிழ் காமிக்ஸ் துறையை அரசின் ஆதரவோடு பாதுகாக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக அரிய பழைய காமிக்ஸ் நூல்களின் கண்காட்சியும் நடைபெற்றது. இதில் எழுத்தாளர்கள், மாணவர்கள் மற்றும் கலைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.