தேங்காய் திட்டு மீன்பிடி துறைமுகம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது
புதுச்சேரி, அக்டோபர் 30: புதுச்சேரி தேங்காய் திட்டு மீன்பிடி துறைமுகம் செல்லும் சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தேங்காய் திட்டு மீன்பிடி துறைமுகம் செல்லும் சாலையில் சிலர் கஞ்சா விற்பதாக முதலியார்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று சந்தேகத்திற்கிடமாக நின்ற வாலிபர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஒப்பளம் உடையார் தோட்டம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கோகுந்தன் வயது 25, ஒப்பளம் நேதாஜி நகர் வீரன் கோவில் தெருவைச் சேர்ந்த சூரியபிரகாஷ் வயது 25 ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 123 கிராம் கஞ்சா பொட்டலங்கள், ஒரு பைக் மற்றும் மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கோகுந்தன் சென்னை தனியார் கல்லூரியில் பிடெக் மூன்றாம் ஆண்டு படித்து வரும் லாஸ்பேட்டை எழில்நகர் முகமது அமீன் என்பவரது மகன் முகமது அமான் வயது 22 என்பவரிடமிருந்து 500 கிராம் கஞ்சாவை வாங்கி வந்து தேங்காய் திட்டுப் பகுதி சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்ததாகத் தெரிவித்தார். இதனையடுத்து முகமது அமானையும் போலீசார் கைது செய்து அவரது மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
