புதுச்சேரி

புதுச்சேரி அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் டிஜிட்டல் கட்டண செலுத்தும் வசதி தொடக்கம்

புதுச்சேரி, அக்டோபர் 31: புதுச்சேரி அரசு அருங்காட்சியகம் மற்றும் ரோமன் ரோலன் நூலகத்தில் கியூஆர் கோடு மற்றும் பிஓஎஸ் இயந்திரங்கள் மூலம் கட்டணம் செலுத்தும் புதிய டிஜிட்டல் வசதி தொடக்க விழா நடைபெற்றது.

புதுச்சேரி அரசின் கலை மற்றும் பண்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் புதுச்சேரி அரசு அருங்காட்சியகம் மற்றும் ரோமன் ரோலன் நூலகத்தில் பொதுமக்களின் வசதிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய டிஜிட்டல் கட்டண செலுத்தும் வசதியினை கலை மற்றும் பண்பாட்டு துறை அமைச்சர் ராஜவேலு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலை மற்றும் பண்பாட்டு துறை செயலாளர் மற்றும் இயக்குனர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மத்திய அரசு நாடு முழுவதும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை ஊக்கிவித்து செயல்படுத்தி வரும் நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேச அரசும் அனைத்து அரசு துறைகளிலும் இந்த முறையை படிப்படியாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டுள்ள இந்த வசதியின் மூலம், அருங்காட்சியகம் மற்றும் நூலகத்திற்கு வருகை தரும் பொதுமக்கள், பார்வையாளர்கள் மற்றும் நூலக பயனாளர்கள் நுழைவு கட்டணம் மற்றும் இதர அனுமதிக்கப்பட்ட கட்டணங்களை கியூஆர் கோடு மற்றும் பிஓஎஸ் இயந்திரங்கள் வாயிலாக பாதுகாப்பாக செலுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொக்க பண பயன்பாட்டை குறைப்பதற்கும், எளிதாகவும் விரைவாகவும் பண பரிவர்த்தனைகளில் வெளிப்படை தன்மையை உறுதி செய்வதற்கும் இந்த நவீன கட்டண வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கியூஆர் கோடு மற்றும் பிஓஎஸ் இயந்திரங்கள் மூலம் வசூலிக்கப்படும் இதர கட்டணங்கள் தனி வங்கி கணக்கில் ஒருங்கிணைக்கப்பட்டு, பின்னர் கணக்குகள் மற்றும் கருவூலை இயக்கத்தின் அறிவுறுத்தலின் படி உரிய அரசு கணக்கில் செலுத்தப்படும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன