தேசியம்

பார்களில் ஆதார் அட்டை பரிசோதனை கட்டாயம்: 23 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்றால் உரிமம் ரத்து – அமைச்சர் எச்சரிக்கை!

திருவனந்தபுரம், அக்.31:
கேரள மாநிலத்தில் 23 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு மதுபானம் விற்பனை செய்வதைத் தடுக்கும் நோக்கில், பார்களுக்கு வருபவர்களின் ஆதார் அட்டையைப் பரிசோதித்த பின்னரே மது வழங்க வேண்டும் என கேரள கலால் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கேரள சட்ட விதிகளின்படி 23 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்ற கடுமையான விதிமுறை நடைமுறையில் உள்ளது. இருப்பினும், பல்வேறு மதுக்கடைகள் மற்றும் பார்களில் இந்த விதி முறையாகப் பின்பற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்து வந்தது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் இளம் வயதினர் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகும் அபாயம் அதிகரித்து வந்தது.

இந்நிலையில், அண்மையில் கொச்சியில் 19 வயதான சுஹைல் என்ற இளைஞர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு அதிவேகமாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில், ஸ்கூட்டரில் சென்ற இரு இளம் பெண்கள் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில், 19 வயது சுஹைல் மற்றும் அவனது நண்பர்கள் அப்பகுதியில் உள்ள 3 பார்களில் மது அருந்தியது உறுதியானது. இதையடுத்து அந்த 3 பார்களின் உரிமங்களும் உடனடியாக ரத்து செய்யப்பட்டன.

இது தொடர்பாகத் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “கொச்சியில் நிகழ்ந்த கோர விபத்திற்கு மதுபோதையே காரணம். 23 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்ற சட்டத்தை மீறிய பார்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் பார்களுக்கு வருபவர்களின் வயதை உறுதி செய்ய ஆதார் அட்டையை கட்டாயம் சரிபார்க்க வேண்டும். இந்த உத்தரவை மீறி சிறுவர்களுக்கு மது விநியோகிக்கும் பார்களின் உரிமம் பாரபட்சமின்றி ரத்து செய்யப்படும்” என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன