புதுச்சேரி விடுதலை நாள் விழாவை அரசு அதிகாரிகள் புறக்கணிப்பு: கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் கண்டனம்!
புதுச்சேரி, நவ. 2: புதுச்சேரி விடுதலை நாள் விழாவில் பெரும்பாலான அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்காமல் புறக்கணித்த விவகாரம் பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
புதுச்சேரி விடுதலை நாள் விழாவில் தலைமைச் செயலர், மாவட்ட ஆட்சியர், செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலர் மற்றும் இயக்குநர் ஆகியோரைத் தவிர்த்து, மற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் துறைத் தலைவர்கள் பெரும்பாலானோர் பங்கேற்கவில்லை. மாநிலத்தின் முக்கிய வரலாற்று விழாவில் அரசு உயர் அதிகாரிகள் இத்தகைய மெத்தனப் போக்கைக் கையாண்டதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதுகுறித்து சிபிஐ மாநிலச் செயலாளர் சலீம் விடுத்துள்ள அறிக்கையில், “இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் போலவே புதுச்சேரி விடுதலைப் போராட்டமும் வீரம் செறிந்தது. 170 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து புதுவை மண்ணை மீட்டெடுக்க எண்ணற்ற போராட்டங்களும் தியாகங்களும் செய்யப்பட்டுள்ளன. அத்தகைய பெருமைமிகு நவம்பர் 1-ஆம் தேதி விடுதலை நாள் விழாவை அரசு உயர் அதிகாரிகள் அலட்சியப்படுத்தி புறக்கணித்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மேலும், புதுவை விடுதலை இயக்கத் தளபதி வ.சுப்பையா சிலைக்கு இந்நாளில் அரசு மரியாதை செலுத்தாததும் கண்டனத்துக்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், சிபிஐ (எம்.எல்) மத்திய கமிட்டி உறுப்பினர் சோ.பாலசுப்பிரமணியன் தெரிவிக்கையில், “விடுதலை நாள் விழாவில் முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான அதிகாரிகளே பங்கேற்றனர். பல அரசுச் செயலர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள், துறை இயக்குநர்கள் கலந்துகொள்ளாதது பேரதிர்ச்சியை அளிக்கிறது. விடுதலை விழாவை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட அதிகாரிகள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

