புதுச்சேரி

குழந்தைகள் தின விழா போட்டிகளில் 11 பரிசுகள் வென்று சாதனை: ப்ரைனி ப்ளூம்ஸ் மாணவர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் பாராட்டு!

புதுச்சேரி: புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை சார்பில் வில்லியனூர் மண்டலம்–V அளவில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாப் போட்டிகளில், ப்ரைனி ப்ளூம்ஸ் கல்விக் குழும மாணவர்கள் பல்வேறு கலை மற்றும் இலக்கியப் போட்டிகளில் திறம்படப் பங்கேற்று 11 பரிசுகளைக் குவித்து சாதனை படைத்துள்ளனர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளைப் பாராட்டும் சிறப்பு நிகழ்ச்சி பள்ளியில் விமரிசையாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் திரு. ஆ. நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சாதனை படைத்த மாணவர்களுக்குப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார். அப்போது பேசிய அமைச்சர், மாணவர்களின் கல்வி வளர்ச்சியோடு கலை, இலக்கியம் மற்றும் இணை செயல்பாட்டுத் திறன்களை இளம் வயதிலேயே கண்டறிந்து ஊக்கப்படுத்துவது மிக அவசியம் என்று குறிப்பிட்டார். மேலும், இதுபோன்ற மண்டல அளவிலான போட்டிகள் மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரச் சிறந்த அடித்தளமாக அமைகின்றன என்றும் அவர் பாராட்டினார்.

நிகழ்ச்சிக்கு ப்ரைனி ப்ளூம்ஸ் கல்விக் குழுமத்தின் செயல் இயக்குநர் திருமதி. திவ்யா அருண்குமார் தலைமை தாங்கி மாணவர்களின் சாதனையைப் பாராட்டினார். பள்ளி முதல்வர் திருமதி. ஜீன் பீட்டர் மற்றும் துணை முதல்வர் திருமதி. நூர்ஜஹான் ஆகியோர் முன்னிலை வகித்து வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இவ்விழாவில் பள்ளியின் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் பெருமளவில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளை உற்சாகமாகப் பாராட்டினர். கல்விப் பணிகளுடன் கலை மற்றும் இலக்கியப் போட்டிகளிலும் மாணவர்கள் தொடர்ந்து சாதனை புரிய பள்ளியில் அளிக்கப்படும் சிறப்புப் பயிற்சிகளே இந்த வெற்றிக்குக் காரணம் எனப் பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன