புதுச்சேரி பாண்லே பால் உற்பத்தியாளர்களுக்கு தீபாவளி பரிசு: ரூ.2.68 கோடியில் விலை வித்தியாசத்தொகை அறிவிப்பு!

புதுச்சேரி: புதுச்சேரி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு (பாண்லே) பால் வழங்கிய பால் உற்பத்தியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விலை வித்தியாசத்தொகை வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குருமம்பேட்டையில் இயங்கி வரும் புதுவை கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
பாண்லே நிறுவனத்திற்கு பால் வழங்கிய 103 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கு, அவர்கள் வழங்கிய பாலுக்கான மொத்த மதிப்பிற்கு ஒரு ரூபாய்க்கு 5 பைசா வீதம் கணக்கிடப்பட்டு, விலை வித்தியாசத்தொகை வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே பட்டுவாடா செய்யப்படும்.
இந்த நிதிப் பலனின் மூலம் புதுச்சேரி கிராமப்புறப் பகுதிகளில் வசிக்கும் சுமார் 6,732 பால் உற்பத்தியாளர்கள் நேரடியாகப் பயனடைவர். இதற்காக பாண்லே நிர்வாகத்திற்கு கூடுதலாக ரூ.2.68 கோடி செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக இத்தொகை வழங்கப்படவுள்ளது பால் உற்பத்தியாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
