புதுவை பல்கலைக்கழகத்தில் சூரிய வெப்ப ஆற்றல் குறித்த 2 நாள் தொழில்நுட்ப பயிற்சி தொடக்கம்!
புதுச்சேரி, நவ. 4:
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் மதன்ஜீத் பசுமை ஆற்றல் தொழில்நுட்ப பள்ளியில் உள்ள பசுமை ஆற்றல் தொழில்நுட்பத் துறை மற்றும் யுனெஸ்கோவின் தூய்மையான ஆற்றல் மற்றும் நிலைத்த வளர்ச்சிக்கான பிராந்திய ஒத்துழைப்பு இருக்கை ஆகியவை இணைந்து சிறப்புப் பயிற்சி முகாமை நடத்தின. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் (MSME) தொழில்துறை வெப்பத் தேவைகளுக்கான செறிவூட்டப்பட்ட சூரிய வெப்ப ஆற்றல் (CST) தொடர்பான இரண்டு நாள் தொழில்நுட்ப பயிற்சி முகாம், பல்கலைக்கழக ஆனந்தரங்கப்பிள்ளை நூலக அரங்கில் தொடங்கியது.
உலக சுற்றுச்சூழல் நிதியத்தின் ஆதரவோடு, ஐக்கிய நாடுகள் தொழில்துறை மேம்பாட்டு நிறுவனம் (UNIDO) மற்றும் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ், பல்வேறு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் யுனெஸ்கோ இருக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இப்பயிற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அருண்பிரசாத் அனைவரையும் வரவேற்றார். எஸ்இஐ&ஆர் இயக்குநர் தாரணிக்கரசு தொடக்கவுரையாற்றினார். தொடர்ந்து பேசிய ஜிஎஸ்இஎஸ் இந்தியாவின் இயக்குநர் த்விபென் போருவா, தொழில்துறையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பயன்பாட்டை அதிகப்படுத்துவதிலும், ஆற்றல் பாதுகாப்பிலும் சிஎஸ்டி (CST) தொழில்நுட்பங்களின் பங்களிப்பு குறித்து விரிவாக விளக்கினார்.
மதன்ஜீத் பசுமை ஆற்றல் தொழில்நுட்பப் பள்ளியின் முதல்வர் ஜாபர் அலி, தங்களது கல்வி நிறுவனத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சி சாதனைகளைப் பட்டியலிட்டார். பசுமை ஆற்றல் தொழில்நுட்பத் துறையின் தலைவர் பிரசாந்த், இத்துறையின் எதிர்கால இலக்குகள், நோக்கம் மற்றும் கல்வித் திட்டங்களை அறிமுகப்படுத்திப் பேசினார். இதில் துறை பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்துறை வல்லுநர்கள் பலர் கலந்துகொண்டனர்.
