தீபாவளி பண்டிகை: பொதுமக்களிடம் பரிசு, இனிப்புகளைப் பெறக்கூடாது – போலீசாருக்கு குமரி எஸ்பி அன்சுல் நாகர் அதிரடி உத்தரவு!

கன்னியாகுமரி:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களிடமிருந்து இனிப்புகள், பட்டாசுகள் அல்லது எவ்வித பரிசுப் பொருட்களையும் காவலர்கள் பெற்றுக்கொள்ளக் கூடாது என்று கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அன்சுல் நாகர் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை வரவிருக்கும் நிலையில், குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அச்சமின்றி பண்டிகையைக் கொண்டாடும் வகையில் காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், காவல்துறையின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையையும் ஒழுக்கத்தையும் உறுதிசெய்யும் வகையில் மாவட்ட எஸ்பி அன்சுல் நாகர் முக்கிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வணிக நிறுவனங்கள், அரசியல் பிரமுகர்கள் அல்லது பொதுமக்களிடமிருந்து எந்தக் காரணத்திற்காகவும் இனிப்புப் பெட்டிகள், பட்டாசுகள், புத்தாடைகள் உள்ளிட்ட எந்தவிதமான அன்பளிப்புகளையோ பரிசுப் பொருட்களையோ காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் பெற்றுக்கொள்ளக் கூடாது என்று திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறி, பொதுமக்களிடம் இருந்து பரிசுப் பொருட்களைப் பெறும் காவல்துறை பணியாளர்கள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். காவல்துறையினரின் இந்த உத்தரவு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், பணியில் நேர்மையையும் பொது அமைதியையும் நிலைநாட்ட உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English summary: Kanniyakumari District Superintendent of Police Ansul Nagar has issued a strict order that police personnel must not accept sweets, crackers, new clothes or any gifts from businesses, political figures or the public ahead of Diwali. He warned that personnel who violate the order will face departmental action. The circular is meant to ensure transparency and discipline in police functioning, and the report says it has been welcomed by the public.



